Nov 2, 2015

நஜ்ஜாஷி மன்னர் (அபீசீனியா)

அடைக்கலம் கொடுத்தவர் இஸ்லாத்தில் ஐக்கியமான வரலாறு
இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம்கள் மக்காவில் பெரும் சோதனைக்கு ஆளானார்கள். இதிலிருந்து தங்களையும் தங்கள் கொள்கையையும் காத்துக் கொள்வதற்காக அபீசீனியாவிற்கு ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் தலைமையில் அடைக்கலம் தேடிச் சென்றார்கள்.
அப்போது அவர்களுக்கு அங்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது  என்று சூழ்ச்சி செய்து, தடுப்பதற்காக மக்காவின் இணை வைப்பாளர்கள் ஒரு குழுவினரை அபீசீனியாவின் மன்னர் நஜ்ஜாஷி அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். ஆனால் நஜ்ஜாஷி மன்னர், மக்கா இணை வைப்பாளர்களின் கோரிக்கையை நிராகரித்து முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு முன்னர் முஸ்லிம்களின் இந்த ஹிஜ்ரத் அமைந்ததால் இது முதல் ஹிஜ்ரத் என்று அழைக்கப்படுகின்றது.
இந்த முதல் ஹிஜ்ரத் தொடர்பாக முஸ்னத் அஹ்மதில் இடம்பெற்றுள்ள செய்தியைப் பார்ப்போம்.
அபீசீனியாவிற்கு நபித்தோழர்கள் அடைக்கலம் சென்றதும், மக்கத்துக் காஃபிர்கள் அபீசீனியாவிற்கு அப்துல்லாஹ் பின் அபீ ரபீஆ இப்னுல் முகீரா அல்மக்ஸும்மிய்யி என்பவரையும், அம்ருப்னுல் ஆஸ் இப்னு வாயில் அஸ்ஸஹ்மிய்யி என்பவரையும் தூதுக்குழுவாக அனுப்பி வைக்கிறார்கள். மக்காவில் அவர்களைத் துன்புறுத்தியது மட்டுமல்லாமல் அபிசீனியா வரை சென்றும் தொந்தரவு கொடுத்தனர்
இந்தக் காஃபிர்கள். கீழுள்ள அதிகாரிகளுக்கு காணிக்கைகளை கொடுத்து முன்கூட்டியே அவர்களை சரிக்கட்டி வைத்துக் கொண்டு, பிறகு அங்குள்ள மன்னரிடம் பேசுவதாகவும், காணிக்கைகள் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நமக்குச் சாதகமாகப் பேசுவார்கள் என்பதுதான் இந்த மக்கத்து காஃபிர்களின் திட்டம். அதேபோன்று கீழுள்ள அதிகாரிகள் அனைவருக்கும் காணிக்கைகள் கொடுக்கப்பட்டு, அவர்களும் நீங்கள் அரசவையில் உங்களது கோரிக்கை களை வையுங்கள். நாங்கள் அதற்குரிய ஆதரவைத் தெரிவிக்கிறோம் என்றும் பேசி முடிக்கப்பட்டது.
பிறகு அரசரிடம் பேசுகிறார்கள். மன்னரே! எங்களது ஊரிலிருந்து சில முட்டாள் சிறுவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் எங்களது சமூக மார்க்கத்தையும் விட்டு விட்டார்கள். உங்களது மார்க்கத்திலும் சேராமல் இருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு பிரிவினர் உங்களது ஊருக்கு வந்திருக்கிறார்கள் என்று அவர்களிடம் தூபம் போடுகிறார்கள் இந்த மக்கத்து காஃபிர்கள்.
இவர்கள் புதிதாக ஒரு மார்க்கத்தைக் கொண்டு வந்துள் ளார்கள். அதனை நாங்களும் அறியவில்லை. உங்களுக்கும் அது தெரியாது என்றும் இவர்கள் நம்மைக் கெடுக்க வந்திருக்கிறார்கள் என்று நஜ்ஜாஷி மன்னரிடம் சொல்லிவிட்டு, நாங்கள் இவர்களின் சித்தப்பாக்களும் பெரியப்பாக்களும் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் தான் எங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். மற்றபடி அந்நியர்கள் அல்ல. வெறுத்துப் போய் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம் என்று கூறினர். அங்கு சபையிலிருந்த அதிகாரிகளும் அப்படியே மொழிந்தனர்.
மக்கத்துக் காஃபிர்கள் நம்மை இங்கிருந்து கொண்டு செல்வதற்காக மன்னரிடம் பேசியிருக்கிறார்கள் என்கிற இந்தச் செய்தி ஜஃபர் பின் அபீதாலிபுக்குக் கிடைக்கிறது. மன்னர் நம்மைக் கூப்பிட விடுவார். மன்னர் நம்மைத் திருப்பியனுப்புவதற்கும் வாய்ப்பிருக்கிறது. என்ன நடக்குமோ என்று பயந்து கொண்டிருக்கிறார்கள்.
ஜஃபர் பின் அபீதாலிப் தான் இந்தக் கூட்டத்திற்குத் தலைவராக இருக்கிறார். மன்னர் நம்மிடம் விசாரணை செய்தால் என்ன சொல்வது? என்ற அவர் தலைமையில் ஆலோசனை நடக்கிறது. அப்போது ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள், எதையெல்லாம் இதுவரை நாம் சொல்லிக் கொண்டிருந்தோமோ அதையே இங்கேயும் சொல்வோம். அதில் ஒளிவு மறைவு தேவையில்லை. என்ன விளைவுகள் வந்தாலும் பரவாயில்லை என்கிறார்.
மார்க்கத்தில் இரகசியம் என்பது கிடையாது. அவ்வாறு நபியவர்கள் நம்மை வழி நடத்தவில்லை என்று முடிவு செய்தார்கள்.
இதுவரை நாம் எதை அறிந்து வைத்திருக்கிறோமோ அதைத்தான் நாம் அல்லாஹ்வின் மீதாணையாகச் சொல்வோம். நபியவர்கள் நமக்கு எதை ஏவினார்களோ அதைச் சொல்வோம். இந்த நாட்டின் கொள்கைக்கு மாற்றமாக இருந்தாலும் சரி! அல்லாஹ்வைத்தான் வணங்கு கிறோம். சிலைகளைத் தான் எதிர்க்கிறோம் என்று சொல்லிவிட்டு, என்ன நடந்தாலும் பரவாயில்லை. சொல்லித்தான் ஆக வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள்.
அதே போன்று  மன்னர்  நபித்தோழர்களை அழைத்து  விசாரிக்கிறார்.
மன்னரே! நாங்கள் எதையும் அறியாத மக்களாக இருந்தோம்.
சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தோம்.
செத்த பிணங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்,
அசிங்கமான, மானக்கேடான காரியங்களைச் செய்து கொண்டு இருந்தோம்.
சொந்த பந்தங்களான உறவுகளைப் பகைத்துக் கொண்டிருந்தோம்,
அண்டை வீட்டார்களுக்குத் தொந்தரவு செய்து வந்தோம்,
பலமானவர்கள் பலவீனமான வர்களைச் சுரண்டி வாழ்ந்து வந்தோம்.
இந்நிலையில் எங்களுக்கு ஒரு தூதரை அல்லாஹ் அனுப்பினான். அவரது பாரம்பரியத்தை நாங்கள் அறிவோம். அவரது உண்மை யையும் நாங்கள் அறிவோம். அவரது நேர்மையும் பரிசுத்தமான வாழ்க்கையும் எங்களுக்குத் தெரியும்.
அவர் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என எங் களுக்குச் சொன்னார். மற்றவைகளை விடச் சொன்னார்.
மரம், செடி, கொடிகள், சிலைகள் போன்ற எதையும் வணங்கக் கூடாது என்று சொன்னார்.
உண்மையை மட்டும் பேச வேண்டும் என்று ஏவினார்.
அமானிதத்தைக் காப்பாற்றச் சொல்கிறார்.
சொந்த பந்தங்களைச் சேர்த்து வாழவேண்டும் என்றார்.
அண்டை வீட்டாருடன் நெருக்கத்தை ஏற்படுத்த ஏவினார்.
இறைவனால் தடை செய்யப் பட்டதைத் தவிர்க்கச் சொன்னார்.
உயிரைக் கொலை செய்யக் கூடாது என்றார்.
அசிங்கமான காரியத்தைத் தடுத்தார்.
பொய் சொல்லக் கூடாது என்றார்.
அனாதை சொத்தைச் சாப்பிடக் கூடாது என்றார்.
பெண்கள் மீது அவதூறு சொல்லக் கூடாது என்று எங்களுக்கு ஏவினார்.
தொழச் சொன்னார்.
ஜகாத் கொடுக்கச் சொன்னார்.
நோன்பு வைக்கச் சொன்னார்
இவ்வாறு ஜஃபர் பின் அபீதாலிப்  (ரலி) அவர்கள் அப்படியே பட்டியல் போட்டு பேசுகிறார்கள்.
இவ்வளவும் சொன்னார் என்று மன்னரிடம் அவரை இஸ்லாத்திற்கு அழைக்கிற அளவுக்கு ஒரு இஸ்லாமியப் பிரச்சாரத்தையே செய்து விட்டார். இதையெல்லாம் நாங்கள் நம்பியதாலும், செயல்படுத்தியதாலும் எங்களை இந்த மக்காவாசிகளான காஃபிர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டனர். அதனால்தான் நாங்கள் எங்கள் ஊரிலிருந்து உங்கள் நாட்டுக்கு வந்துவிட்டோம். உங்களைத் தேர்ந்தெடுத்து விட்டோம். உங்களது அடைக்கலத்திற்குத் தான் நாங்கள் ஆசைப்படுகிறோம். மன்னரே! உங்களது ஆட்சியில் எங்களுக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது என்பதற்காகத் தான் நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம் என்று கூறினார்கள்.
இப்படியெல்லாம் நஜ்ஜாஷி மன்னரிடம் ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள் பேசியதும் அவர், "மக்காவிலிருந்து வந்தவர்களிடம் நான் விசாரித்து விட்டுத்தான் சொல்ல முடியும்' என்று சொல்லி விடுகிறார். உங்களிடம் இவர்களை ஒப்படைக்க முடியாது என்று மறுத்து விடுகிறார்.
மறுநாள் மன்னரிடம் மக்கா காஃபிர்கள், "நீங்கள் நம்பும் ஈஸாவைப் பற்றி இவர்களிடம் விசாரியுங்கள்' என்று கேட்டுக் கொள்கிறார்கள். அது போன்றே, "ஈஸாவைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்று மன்னர் நஜ்ஜாஷி நபித்தோழர்களிடம் கேட்டதற்கு,
ஈஸா என்பவர் அல்லாஹ்வின் தூதர்,
அல்லாஹ்வின் மகனாக அவர் இல்லை,
அல்லாஹ்வின் வார்த்தையினால் உருவானவர்,
அவர் அல்லாஹ்வின் மார்க் கத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னார்.
என்று சொன்னார்.
உடனே நஜ்ஜாஷி மன்னர், உங்கள் நபி முஹம்மதுக்கு இறைவனிட மிருந்து வேதம் வருவதாகச் சொன்னீர்களே, அதை வாசித்துக் காட்ட முடியுமா? என்று கேட்கிறார்.
அப்போது ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள், காஃப், ஹா, யா, ஐன், ஸாத். (இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்கு செய்த அருளைக் கூறுதல்! என்ற சூரத்துல் மர்யம் என்ற 19வது அத்தியாயத்தை ஓதிக் காட்டுகிறார். அதைக் கேட்டதும் மன்னர் நஜ்ஜாஷி அவர்கள், கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகின்றது. இது மூஸா நபிக்கு யாரிடமிருந்து வந்ததோ அவரிடமிருந்தே இவருக்கும் வந்ததைப் போன்றுள்ளது என்று கூறிவிடுகிறார். மேலும் நீங்கள் எங்களது நாட்டில் அடைக்கலம் பெற்று விட்டீர்கள். உங்களது மார்க்கத்தின் பிரகாரம் இங்கே நடந்து கொள்ளலாம் என்றும் அனுமதியளித்து விடுகிறார்.
இந்தச் சம்பவம் தான் நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்க அடிப்படையாக அமைந்தது.
பிற்காலத்தில் நஜ்ஜாஷி மன்னர் இறந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்காக காயிஃப் ஜனாஸா தொழுகை நடத்தியதற்கும் இதுதான் காரணம்.
அபீஸீனிய மன்னர் நஜ்ஜாஷி இறந்த செய்தியை நபிகள் நாயகம் அறிவித்த போது "உங்கள் சகோதரருக் காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1328
இது பற்றி மற்றொரு அறிவிப்பில் "நஜ்ஜாஷி மன்னர் முஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் இறந்து விட்டார். எனவே உங்கள் சகோதரருக்குத் தொழுகை நடத்துங்கள்'என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன்
நுல்கள்: அஹ்மத் 14434, 14754, 15559

ஏகத்துவம் அடோபர் 2015